டில்லி:
ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஒடிசாவின் பிஜப்பூர் மற்றும் ம.பி.யின் மங்காலி, கொலாரஸ் ஆகிய 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் மாலையுடன் பரபரப்பான தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அந்த பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒடிசா – பிஜப்பூர் தொகுதி:
281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், முதன்முறையாக இங்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியை கைப்பற்ற ஆளும் மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே 2 முறை ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரசாரம் செய்துள்ள நிலையில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜூயல் ஓரம் மற்றும் ஸ்மிதிர ராணியும் தேர்தல் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக இந்த தேர்தலின் முடிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ம.பி. -மங்காலி, கொலாரஸ்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவை தொடர்ந்து இன்று சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மங்காலி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக பிஜேந்திரசிங் யாதவ், கொலாரஸ் தொகுதியில் மகேந்திரசிங் யாதவும் போட்டியிடுகிறார்கள். பாஜக சார்பில் மங்காலியில், பைசாகப் யாதவு, கொலாரசில் தேவேந்திர ஜெயினும் போட்டியில் உள்ளார்கள்.
இந்த இடைத்தேர்தல்களில் இழந்த இடத்தை கைப்பற்ற காங்கிரசும், தொகுதியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 3 தொகுதிகளிலும், பதிவாகும் வாக்குகள் வரும் 28-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.