நெட்டிசன்:

Rajasangeethan John அவர்களது முகநூல் பதிவு:

நான் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இதைத்தான் இப்படித்தான் செய்வீர்கள் என நினைத்தேன். மிக கச்சிதமாக அதையே செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது உண்மைதான். உங்களுக்கு அரசியல் வராது. நடிக்க மட்டும்தான் வரும். அதுவும் வயதான காரணமோ என்னவோ நேற்றைய மேடையில் எடுபடவில்லை. பச்சையாக நடிப்பு என பல்லிளித்து காட்டி விட்டது.

உங்கள் படங்களை ரசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் திரைக்கதைகள் இரண்டு வகை. ஒன்று, கெட்ட முகாமில் முதலில் இருந்து பின் உணர்ந்து கடைசியில் நல்ல முகாமுக்கு வந்து சேர்வது. சத்யா தொடங்கி ஹேராம், விருமாண்டி, மருதநாயகம் வரை இதுதான். இரண்டு, என்ன நடக்கும் என தெளிவாக தெரிந்தும் திருந்தாமல் அப்படியே இருந்து பின் சிக்கல் வந்ததும் பிரச்சினையில் உழலுவது. சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, நாயகன் போல்.

இப்போதைய உங்களின் திரைக்கதை இரண்டாம் வகை. நீங்கள் தெரிந்தேதான் விழுகிறீர்கள். இதில் எள்ளளவும் நல்லது நடக்க போவதில்லை உங்களுக்கும் சரி மக்களுக்கும் சரி. உங்களின் மாநாடு அத்தனை தட்டையாக இருந்தது.

ஏன் இத்தனை அதிருப்தி என கேட்கலாம். சொல்கிறேன்.

தரமான கல்வி என்கிறீர்கள் எது தரம் என சொல்லவில்லை. சிலர் நீட்டை தரம் என்கிறார்கள். சிலர் சமச்சீரை தரம் இல்லை என்கிறார்கள். சிலர் இட ஒதுக்கீடே தவறு என கூறுகிறார்கள். உங்களின் தரம் என்ன?

சாதி, மத பிரச்சினைகள் அற்ற என்கிறீர்கள். எந்த சாதி, எந்த மதம்? ஆர்எஸ்எஸ்ஸுக்கு சிறுபான்மை மதங்கள் பிரச்சினைதான். ஆதிக்க சாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட சாதிகள் பிரச்சினை. உங்கவா சாதிகளுக்கு பிற்படுத்தப்பட்டவா எல்லாருமே பிரச்சினை. நீங்கள் எந்த பிரச்சினையை சொல்கிறீர்கள்?

ஊழலற்ற என்கிறீர்கள். ஊழல் கட்சி சார்ந்ததா அமைப்பு சார்ந்ததா? திமுக, அதிமுகவை ஒழித்தால் ஊழலை ஒழித்துவிடலாம் என நீங்கள் நம்பலாம். அல்லது நாங்கள் அப்படி நம்புவோம் என நீங்கள் நம்பலாம். ஆனால் சிக்னலில் நிற்கும் டிராபிக் போலீஸ்காரன் எந்த கட்சிக்காரன்? கார்ப்பரெட்டுக்கு அரசு வழங்கும் மானியம் உங்கள் ஊழல் கணக்கில் வருமா? மல்லையா? நீரவ்? பணமதிப்புநீக்கம்? இவையெல்லாம் யாருடைய ஊழல் கணக்காக சொல்வீர்கள்?

முறையாக உரையாடல் நடத்தினால் காவிரி கிடைக்கும் என்கிறீர்கள். எனக்கும் கர்நாடக மக்களுடன் பிரச்சினை இல்லைதான். மக்கள் எப்போதுமே அப்பாவிகள்தான். தங்களை அறிவாளிகள் என நினைத்துக் கொள்ளும் அப்பாவிகள். வட்டாள் நாகராஜை கூட விட்டுவிடுங்கள். கர்நாடகாவில் உள்ள முக்கியமான பிரச்சினை என்ன தெரியுமா? அந்த அரசு, நமக்கு வர வேண்டிய காவிரியை மட்டுமல்ல, அந்த மாநில மக்களுக்கும் கிடைக்க வேண்டிய காவிரியை சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அந்த உண்மை உறைத்துவிடக் கூடாது என்பதால்தான் அந்த அரசு அம்மக்கள் கோபத்தை நம்மீது திருப்பி விடுகிறது.

இப்போது சொல்லுங்கள். உங்களின் உரையாடல் யாரிடம்? கர்நாடக அரசோடா பன்னாட்டு நிறுவனங்களோடா?

ஒபாமாவையும் பிடிக்கும் என்கிறீர்கள். ஒபாமாவை பிடிக்குமா அல்லது ஒபாமா வகித்த பதவி தலைமை தாங்கும் அரசு பிடிக்குமா?

காவிரி பற்றி பேசுகிறீர்கள். காவிரியை முடக்குவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று தஞ்சை மீத்தேன். உங்களின் நிலை என்ன? மீத்தேனை எதிர்த்தால் ஒபாமா கும்பல் கோபித்துக் கொள்ளுமே என்ன செய்வீர்கள்?

NGO அரசியலில் என்ன தவறு என்கிறீர்கள். பசித்தவனுக்கு பன்னை கொடுப்பது NGO அரசியல். பசித்தவனுக்கு ஏன் தன் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்ற கேள்விதான் வர வேண்டுமே ஒழிய பன் கிடைக்க வேண்டியதில்லை. நீங்கள் ஆர்டிஓவில் லஞ்சம் வாங்குவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் ஏன் லஞ்சம் வாங்கப்படுகிறது என்பதை யோசிக்க சொல்கிறேன்.

மக்கள் நீதி மய்யம்.. அமைப்பு பாணியில் முயலுகிறீர்கள். இருக்கட்டும். எங்களின் குறைகளை உங்களிடம் சொல்லி நீங்கள் தீர்க்க போராட போகிறீர்களா? அய்யா, எங்களுக்கு தேவை சாப்பாடு. எங்களின் வங்கி சேமிப்பு. கட்டுக்குள் உள்ள விலைவாசி. எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை. உலகவங்கியிடம் இருந்து விடுதலை. தெருவிளக்கு பல்பு உடைந்துவிட்டது என்பதல்ல எங்கள் பிரச்சினை.

இடதல்ல, வலதல்ல. இரண்டிலுமிருந்து எடுத்து கொள்வேன் என்கிறீர்கள். கேட்டால் மய்யம் என்கிறீர்கள். இடதும் வலதும் இல்லாமல் மய்யம் இருக்க முடியுமா? அப்படி இடதும் வலதும் நிச்சயம் இருக்குமெனில், அவற்றுக்கிடையில் பேதங்கள் இல்லாமல் இருக்க முடியுமா? அந்த பேதங்கள் மய்யத்தில் பிரதிபலிக்காமல் இருந்திட முடியுமா? நான் விஞ்ஞானம் பேசிக் கொண்டிருக்கிறேன் அய்யா. பூமி தட்டை என சொன்னவனுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்? பூமிக்கே இருதுருவங்கள் உண்டு. அவற்றின் மத்தியில், so called மய்யத்தில் இருக்கும் பகுதிகளுக்கு வானிலையே. தெரியுமா?

இவ்வளவு சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் உங்களுக்கு தெரியாமக் ஒன்றும் இருக்காது. நான் ஏற்கனவே சொன்ன இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன். சிலர் சந்தர்ப்பவாதத்துக்காக தன் அறிவை பயன்படுத்தி முட்டாள்தனமான ஒரு விஷயத்தை உண்மை என அடித்து கூறுவார்கள். அதுகூட பிரச்சினை அல்ல. அப்படியே பேசி பேசி ஒரு கட்டத்தில் அதுவே உண்மையென அவர்களே நம்பவும் தொடங்கிவிடுவார்கள். திருடன் தன்னை சாமியார் என நம்ப தொடங்கிவிடுவதை போல். இரண்டாவது விஷயம், Dark knight படத்தில் வரும் வசனம். ‘You Either Die A Hero, Or You Live Long Enough To See Yourself Become The Villain.’

You will be seeing how you gonna become a villain.. or a comedian I should say!

இறுதியாக, சித்தாந்தமற்ற apolitical அரசியல் செய்யும் உங்களின் கோமாளித்தனத்துக்கு நீங்கள் சொன்ன ஒரு வசனம், சற்று வித்தியாசமாக. கேட்டுக் கொள்ளுங்கள்.

“விந்திய மலைக்கு இந்த பக்கம் இருக்குற இந்தியா வேற இந்தியா.. இது திராவிட பூமி!”