சென்னை:
சென்னை மவுண்ட் முதல் ஏர்போர்ட் (சின்னமலை – விமான நிலையம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அதன் விரிவாக்கம் ஏர்போர்ட் வரை செல்கிறது.
சென்னையில் சின்னமலை – ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் (11 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 9 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்தும், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்தும் இந்த ரயில் சேவையை தொடங்க ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடிவுற்ற நிலையில் ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் இயக்கம் முடிவு செய்தது. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்சேவை நாளை தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன.
இந்த மெட்ரோ ரெயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
விமான நிலையத்தில் நடக்கும் மெட்ரோ ரெயில் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்துகொள்கிறார்.