புற்று நோயாளிகளுக்காக தன்னை அர்ப்பணித்த டாக்டர் சாந்தா தனது 94வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் சாமானியன் வரை அனைத்து தரப்பினரும், இரங்கலும், புகழாரமும் சூட்டி வருகின்றனர். தமிழகத்தின் அன்னை தெரசாவாக, புற்று நோயாளிகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த, மருத்துவர் சாந்தாவின் வாழ்க்கை, பலருக்கு ஒரு சிறந்த உத்வேகமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
அடையாறு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது புற்றுநோய் மருத்துவமனைதான். 1954 ஆம் ஆண்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் தலைமையில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இன்று ஆலமரமாய் விரிந்துள்ளது. அடையாறின் கரையோரம், கொசுக்கள் நிறைந்த கரையில் சிறிய குடிசைகளாகத் தொடங்கியது, இந்த மருத்துவமனை பின்னர், கட்டிடங்கள் எழுப்பப்பட்டு புற்றுநோய் மருத்துவமனையாக “பெயரிடப்பட்டது”.
இந்த புற்றுநோய் நிறுவனம் (W.I.A.) ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். தமிழ்நாட்டின் சென்னையை மையமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இது தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகவும், நாட்டின் இரண்டாவது மருத்துவமனை யாகவும் இருந்து வருகிறது. இங்கு, 500 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை உள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி இலவச படுக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1954-ம் ஆண்டு குடிசையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தன்னையும் இணைந்துக்கொண்ட சாந்தா, இதற்காக அரசுப் பணியையும் கைவிட்டார். அதன் பிறகு கடந்த 67 ஆண்டுகளாக சாந்தாவின் உலகமே இந்த புற்றுநோய் நிறுவனம்தான். நி றுவனத்தை விரிவுபடுத்துவது, நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தத் திட்டமிடல் போன்ற பணிகளுடன், தினந்தோறும் மருத்துவ சிகிச்சையும் வழங்கி வந்தார்.
1974 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் பிராந்திய புற்றுநோய் மையமாக மாற்றப்பட்டது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் “சிறந்த மையமாக” அறிவிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய்க்கான பல்வேறு துணை சிறப்புகளில் பட்டங்களை வழங்கிய இந்தியாவின் முதல் மருத்துவப் பள்ளி புற்றுநோய் நிறுவனம் (WIA), அடையாறு புற்றுநோய் நிறுவனம்.
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த எம்.டி (கதிரியக்க சிகிச்சை), டி.எம் (மருத்துவ புற்றுநோயியல்), எம்.சி.எச் (அறுவைசிகிச்சை புற்றுநோயியல்) மற்றும் பிற டிப்ளோமா மற்றும் பெல்லோஷிப் திட்டங்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. மருத்துவ இயற்பியல், மனோ-புற்றுநோயியல் மற்றும் மூலக்கூறு புற்றுநோயியல் ஆகிய துறைகளில் எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. ஆராய்ச்சிக்காக மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவராக சாந்தா பொறுப்பேற்றது முதல், இன்றுவரை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. இங்கு, லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்திய இந்த நிறுவனத்துக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பவர் மருத்துவர் சாந்தா.
இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு முதல் இன்றைய இந்திய அரசியல் பிரபலங்கள் வரை அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ள சாந்தா, தனது தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக ஆசியாவின் உயரிய விருதான `மகசேசே’ விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் இன்றைய முதல்வர் பிரதமர் மோடி வரை அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றவர்.
அடையாற்றின் மற்றோர் ஆலமரம்போல புற்றுநோய் நிறுவனத்தை விருட்சமாக உருவாக்கிய சாந்தாவின் மரணம், மருத்துவ உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது. வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் புற்றுநோய் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
மருத்துவர் சாந்தா ஏற்கனவே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், கொரோனா சமயத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதை மட்டும் தவிர்த்துள்ளார். தனது அலுவலக வீட்டில் இருந்தபடியே வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுவந்தார். பருவமழை காரணமாக, சீதோஷ்ன நிலை மாறுபாட்டால், அவ்வப்போது, சுவாசப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சாந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17ந்தேதி) மருத்துவர் சாந்தாவுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உடல்நிலை சரியானதும் வீடு திருப்பியவர், நேற்று இயல்பாகவே இருந்ததாக அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சாந்தாவுக்கு மீண்டும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக, அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் சாந்தா காலமானார்.
அவரது உடல், சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் உள்பகுதியில் உள்ள வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் நிறுவன ஊழியர்கள், பிரபலங்கள், பொது மக்கள் பலரும் சாந்தாவுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.