உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்பவர்கள் அங்கு வாழும் எந்த ஒரு இனத்தவருடனும் சேர்ந்து வாழ்ந்து வாரிசுகளை பெற்றெடு்ப்பது வழக்கமான ஒன்று.

அப்படி அவர்கள் பெற்றெடுக்கும் வாரிசுகளின் இனத்தை அடையாளப்படுத்த அங்குள்ள மக்கள் புதிது புதிதாக சில குறியீடுகளை சொல்வதுண்டு.

அதில் ஒன்றுதான் ‘பிலென்டியன்’ (Blindian), பெற்றோர் இருவரில் ஒருவர் கருபபினத்தவராகவும் மற்றவர் இந்தியராகவும் உள்ளவர்களின் பிள்ளைகளை இப்படி அழைக்கிறார்கள்.

கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடு்க்கப்பட்ட பிறகு ‘பிலென்டியன்’ என்பதற்கு அடையாளமாக மாறியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

இதுவரை ‘பிலென்டியன்’ என்பது பெருமளவு யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கு உதாரணத்துடன் சொல்லக்கூடிய அளவில் ஒருவர் அமெரிக்காவில் உருவெடுத்திருப்பது, அங்குள்ள ‘பிலென்டியன்’ சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த, ஷர்தா சேகரன் எனும் ‘பிலென்டியன்’, “நான் பிறந்தது முதல் என்னை தனியாளாக என் தாய் பல சிரமங்களுக்கு இடையில் வளர்த்தார், அவர் கறுப்பினத்தை சேர்ந்தவர்”

நான் சென்ற பள்ளியில் என்னை கறுப்பினத்தை சேர்ந்த பெண்ணாக தான் அனைவரும் பார்த்தார்கள், எனது பெயரை கேட்டவுடன் அவர்களுக்கு இது என்ன கறுப்பின பெயராக இல்லாமல் புதிதாக இருக்கிறதே என்று வியப்பு ஏற்படும்.

ஷர்தா சேகரன் அவரது தாய் பார்பரா வில்லியம்சுடன் (நன்றி : ஷர்தா சேகரன்)

பெற்றோரில் ஒருவர் கறுப்பினத்தவரும் மற்றொருவர் தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஒருவராக இருப்பவர்களை ‘பிலென்டியன்’ என்று அழைத்தாலும் அது யாருக்கும் அதிக பரிச்சயமில்லாத சமுதாயமாகவே இருந்தது, இதில் பெரும்பாலானோர் கறுப்பினத்தவருக்கும் இந்தியருக்கும் பிறந்தவர்களாகவே இருந்தனர்.

தற்போது, இந்திய தாய்க்கும், ஜமைக்காவை சேர்ந்த கறுப்பின தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிஸ், முதல் முறையாக இரு இனத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இங்குள்ள இந்த இரு இனத்தை சேர்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

2017 ம் ஆண்டு ‘பிலென்டியன்’ என்பது சமூக வலைதளத்தில் பிரபலமான போதும், கறுப்பின மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது, இது அங்குள்ள மற்ற இனத்தவரை போல் அல்லாமல் மிகவும் மோசமானதாகவே உள்ளது என்று அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசியரியராக இருக்கும் நிடாஷா சர்மா கூறியிருக்கிறார்.

‘பிலென்டியன்’ ஒருவருடன் வாழ்ந்து வரும் இவர், “இந்திய பெண்களுக்கு கறுப்பினத்தை சேர்ந்த ஆண் நண்பர் இருக்கிறார் என்பதையே இங்குள்ள இந்திய பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை”.

அஞ்சலி பெர்குசன் தன் கணவர் ஜஸ்டின் மற்றும் அவர்களது குழந்தை ஜெய்யுடன் (நன்றி : வாஷிங்டன் போஸ்ட்)

“இந்தியர்கள் கறுப்பினத்தில் இருந்து மாறுபட்டவர்கள் என்பதை முன்னெடுக்கவும், தங்கள் சமுதாயம் மிகவும் சிறந்தது என்று நிலைநிறுத்தவே முயற்சிசெய்கிறார்கள்” என்றும் கூறுகிறார்.

“ஒரு வெள்ளை இன ஆண் வாழ்க்கை துணையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள கூடிய இந்திய பெற்றோர்கள், கறுப்பினத்தவராக இருக்கும் பட்சத்தில், வாழ்நாள் முழுதும் ஏச்சுக்கள் செய்வது வினோதமாக உள்ளது, இது அவர்கள் மனதில் புரையோடிப் போயுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறார் அஞ்சலி பெர்குசன், இந்தியரான இவர் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவருடன் வாழ்கிறார்.

இப்படி, தன் சொந்த இனத்திலும், தன் வாழ்க்கை துணையின் இனத்திலும் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் வாழும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஒருவித வெறுப்புணர்வுடன் ஒதுங்கியிருந்த ‘பிலென்டியன்’ சமுதாயத்திற்கு அடையாளமாக அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிஸ் விளங்குவதோடு, இவர்களின் புதிய விடியலுக்கும் அடையாளமாக இருப்பார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.