தஞ்சை:

குடும்பத்தகராறு காரணமாக தாய் தற்கொலை செய்துகொள்ள, தந்தை புறக்கணிக்க.. நான்குமாத பெண் குழந்தை தவித்துக்கிடப்பது தஞ்சை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (26). கூலி வேலை செய்துவருகிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த லட்சுமி (24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு நான்கு மாத பெண் குழந்தை இருக்கிறது.

திருமணம் ஆனதில் இருந்தே கணவன் மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமை, கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்துவிட்டனர்.

இருவரும்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி லட்சுமி மரணமடைந்தார். வெங்கடேசன் பிழைத்துக்கொண்டார்.

இதையடுத்து லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை முருகேசன் மற்றும் உறவினர்கள் லட்சுமியின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி  தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. சுரேஷ், டி.எஸ்.பி. தமிழ்ச்செல்வன்,  இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள்  லட்சுமியின் உடலை எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே லட்சுமி – வெங்கடேஷ் தம்பதியின் நான்கு மாதக் குழந்தையை யார் பராமரிப்பது என்று இருவரின் குடும்பத்துக்கும் வாக்குவாதம் நடந்தது.

லட்சுமியின் பெற்றோர், குழந்தையை ஏற்க மறுத்து மதுரைக்குக் கிளம்பினர்.

குழந்தையின் தந்தை வெங்கடேஷ், “இது தனது  குழந்தையே இல்லை” என்று புறக்கணித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இரு வீட்டாரும் புறக்கணித்த நிலையில், தற்போது அந்த நான்குமாத பெண் குழந்தையை கடந்த மூன்று நாட்களாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பராமரித்து வருகிறார்கள்.

“இது நிரந்தர ஏற்பாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான். குழந்தையை தத்து எடுக்க விரும்புவர்கள், சட்டபூர்வமாக இந்தக் குழந்தையை தத்தெடுக்க முயலலாம். அதற்கு இரு குடும்பத்தினரும் ஒப்புக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. அந்த நான்கு மாத சிசு அழுதுகொண்டே இருப்பதைக் கேட்கையில் மனம் பதறுகிறது” என்று அக்கம்பக்கத்தினர் துயரத்துடன் சொல்கிறார்கள்.