சிறப்பு ரயில்களிலேயே இறக்கும் கொடுமை….
கொரோனா ஊரடங்கினால் வெளியிடங்களுக்குப் பணி நிமித்தம் சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவது நடந்து வருவது அறிந்ததே. ஆனால் அவர்களுக்கு முறையாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக நிலவி வருகிறது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு பரிதாப சம்பவம் நேற்று முஸாஃபர்பூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. சூரத்திலிருந்து தமது இரு குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த ஓர் பெண்மணி முஸாஃபர்பூர் ரயில் நிலையம் அடையும்போது இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரது உடல் அங்கேயே இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் தனது தாய் இறந்தது பற்றி அறியாத அந்த ஒரு குழந்தை தனது தாயை எழுப்ப முயற்சித்து அவரின் மேல் போத்தியிருந்த போர்வையைப் பிடித்து இழுத்துள்ளான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் அரசு நிர்வாகமோ வழக்கம் போல, “அந்த பெண்மணி மனநிலை சரியில்லாதவர். நாங்கள் சொன்ன அறிவுரை எதையும் அவர் கேட்கவில்லை். தற்போது இவரது உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்கிற பதிலையே கூறுகின்றனர்.
இவர்களின் கூற்றைப் பொய்யாக்கும் விதமாக டெல்லியிலிருந்து வந்த நான்கு வயது குழந்தை ஒன்றும் நேற்று இதே முஸாஃபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்திருக்கிறது. “அக்குழந்தை கடுமையான வெயில் மற்றும் சோர்வு காரணமாகவே இறந்தது” என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
மேலும் கடந்த புதனன்று சிரமிக் சிறப்பு ரயிலில் நான்கு பேர் ரயிலிலேயே இறந்து கிடந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
– லெட்சுமி பிரியா