ரேன்சம்வேர் இணைய வைரஸை தொடர்ந்து புதிய வைரஸ் கம்ப்யூட்டர்களை தாக்கி வருவதாக சீனாவின் தேசிய இணைய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன தேசிய கம்ப்யூட்டர் வைரஸ் அவசர உதவி மையம் (சி.வி.இ.ஆர்.சி.) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ யு.ஐ.டபிள்யு.ஐ.எக்ஸ் என்னும் புதிய கம்ப்யூட்டர் வைரஸ் பரவுகிறது. விண்டோஸ் மென்பொருளில் உள்ள குறைபாட்டைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர்களிலும், சேமிப்பகங்களிலும் ஊடுருவும் இந்த வைரஸ் அவற்றை முடக்கும் வல்லமை கொண்டதாகும்.

முந்தைய ரேன்சம்வேர் வகையைச் சேர்ந்த பிணைப் பணம் பறிக்கும் வைரஸ் போலவே இந்த வைரஸும் செயல்படுகிறது’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிவிப்பில், ‘‘ ஒரு கம்ப்யூட்டரில் இது நுழைந்துவிட்டால் அதன் சேமிப்பகத்தை முடக்கிவிடும். மேம்படுத்தாத விண்டோஸ் மென்பொருளைப் பயன்படுத்துவோர் உடனடியாக மேம்படுத்திய புதிய மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக டென்மார்க் இணைய பாதுகாப்பு சேவை நிறுவனமான ஹைம்டால் கடந்த வாரமே எச்சரித்திருந்தது. இந்த புதிய வைரஸ் ரேன்சம்வேர் வைரஸைவிட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

வைரஸ் என்பதும் ஒரு மென்பொருள் என்பதால் அதன் செயல்பாட்டைத் தடுக்க அந்த மென்பொருளிலேயே ஒரு தடுப்புக் குறியீட்டு மென்பொருள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய வைரஸில் அது போன்ற தடுப்பு மென்பொருள் இல்லை’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘சீனாவில் பெரும்பாலும் திருட்டு மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய வைரஸ் குறித்து சீன அரசு அமைப்பே தீவிர எச்சரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் உலகெங்கும் பல்வேறு சைபர் வைரஸ் தாக்குதலுக்கு சீனா காரணம் என்று சில நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போது புதிய வைரஸ் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டு தங்களைப் பொறுப்பு மிக்க நாடாக சீனா காட்டிக் கொள்கிறது’’ என்று பிரான்ஸ் அரசு இணைய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த செவரின் ஆர்சீன் தெரிவித்துள்ளார்.