இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜக்கரியா இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

‘‘இந்தியாவில் 2 ஆயிரத்து 600 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக் கூடிய திறன் உள்ளது. உலகின் அணு ஆயுதத்தில் விரைந்து வளரக்கூடிய திட்டம் இந்தியா வசம் உள்ளது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

 

மேலும் அவர் கூறுகையில், ‘‘ஆனால் அணு எரிபொருள், உபகரணம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறக்குமதி செய்து பாகிஸ்தானை இந்தியா திசை திருப்புகிறது. அணு விநியோக குழுமத்தில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கு முன்பு அந்நாட்டின் மீது எழுந்துள்ள அச்சத்தை உலக நாடுகள் பரிசோதனை செய்ய வேண்டும்’’ என ஜக்கரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அணுசக்தி கோட்பாடுகள் குறிந்து ஆய்வு செய்வதாக வெளியான தகவல்களை தொடர்ந்தே பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற அணு கொள்கையில் இருந்து இந்தியா பின்வாங்கிவிட்டது. அதே சமயம் அணு ஆயுதத்தை பாகிஸ்தான் முதலில் பயன்படுத்தபோகிறது என்ற அச்சுறுத்தல் எழுந்தாலே முன்னெச்சரிக்கையாக அணு ஆயுதத்தை பயன்படுத்த இந்தியா தயாராகும்’’ என்று அணு வல்லுவனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த இந்தியா அனுமதிக்காது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவின் முன்னெச்சரிக்கை தாக்குதல் என்பது பாகிஸ்தானின் ஏவுகணைகளை நோக்கிய போர் யுக்தியாக தான் இருக்கும்.