டில்லி

பா ஜ க வில் 80% அதிகமானோர் அத்வானி ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்தனர் என சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.

பிரபல இந்தித் திரைப்பட நடிகரும் பா ஜ க வின் முன்னாள் அமைச்சருமான சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் அருமைச் சீடர்களில் ஒருவர்.  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை விட அத்வானியே சரியான தேர்வு என கூறியவர்.  ஆனால் கட்சித் தலைமை மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து வெற்றி அடைந்தது.  தற்போது பா ஜ க வின் பாராளுமன்ற உறுப்பினராக சத்ருகன் சின்ஹா இருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் “எனது கட்சி என்றுமே பா ஜ க தான். நான் இதில் இருந்து விலக என்றுமே எண்ணியது இல்லை.  என்னை அந்த இருவர் படை சட்டை செய்யவில்லை என்பதனால் நான் எதற்கு கட்சியை விட்டு விலக வேண்டும்? (அவர் குறிப்பிட்ட இருவர் படை மோடியும் அமித்ஷாவும் ஆவார்கள்).  அந்த இருவர் படை என் மீது கோபம் கொள்ளக் காரணம் நான் பெரும்பான்மையான பா ஜ க தொண்டர்களின் கருத்தை பிரதிபலித்தது தான்.

சோனாக்ஷி சின்ஹா

பா ஜ க வில் 80%க்கும் அதிகமானோர் ஜனாதிபதி ஆக தகுதி உள்ளவர் அத்வானிதான் என விருப்பம் தெரிவித்தனர்.  அதையே நானும் கூறினேன்.  ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை.  நான் பல வாரங்களாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டேன்.  ஆனால் அவர் நேரம் ஒதுக்கவில்லை.  எனது மகனுடைய திருமணத்துக்கு வருகை தந்தமைக்கு அவருக்கு நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.  ஆனால் அதே நேரத்தில் என்னை சந்திக்க நேரம் ஒதுக்காதது எனக்கு சிறிது மனச் சங்கடமாக உள்ளது.  நான் தனிப்பட்ட முறையில் பிரதமரிடமோ அமித்ஷாவிடமோ எந்த ஒரு கோரிக்கையும் வைத்ததில்லை.

எனது தேர்தல் பரப்புரை நிகழ்த்தக் கூட நான் அவர்கள் இருவரையும் அழைக்கவில்லை.   அவ்வளவு ஏன் எனது மகளும் புகழ்பெற்ற நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவைக் கூட எனக்கு பரப்புரை செய்ய அழைக்கவில்லை.  ஆனாலும் நான் அதிக வாக்குகள் பெற்றேன்.” எனக் கூறி உள்ளார்.