ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் கூட்டணி வெற்றி வாய்ப்பை நெருங்கி உள்ளதால், அங்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜார்க்ண்டில் மீண்டும் சோரனின் ஆட்சி உறுதியாகி உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 13 ஆம் தேதி 43 தொகுதிகளுக்கும், நவம்பர் 20ஆம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 67.74 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தலில்,முதல்வர் ஹேமந்த் சோரனின் JMM கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதம் உள்ள தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 30 இடங்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD)6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) 4 தொகுதிகள் என வழங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாஜக 68 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (AJSU) 10 இடங்களிலும், ஜனதா தளம் (ஐக்கிய) இரண்டிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
ஜார்க்ண்ட் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 41 இடங்களை தேவை என்ற நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகள் 51 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதை எதிர்த்து போட்டியிட்ட, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 28 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 31 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.