ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டில் ஒரேநாளில் நடந்து முடிந்த பெரிய தேர்தலையடுத்து, கோடிக்கணக்கான வாக்குச் சீட்டுகளை எண்ணும் கடினமான பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், இதுவரை 272 தேர்தல் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

இதுதவிர, 1,878 பேர் சோர்வு மற்றும் களைப்புதொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் செலவைக் குறைக்கும் வகையில், இந்தோனேஷியாவில் அதிபரை தேர்வு செய்வதற்கும், தேசிய மற்றும் பிராந்திய நாடாளுமன்றங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கும் ஒரேநாளில் தேர்தல் நடந்தது.

இந்தோனேஷியா என்பது ஆயிரக்கணக்கான தீவுக் கூட்டங்கள் அடங்கிய, மிக மிக சிக்கலான நிலவமைப்பை உடைய ஒரு நாடு என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாக்காளரும் 5 வாக்கு சீட்டுகளில் முத்திரைகளை பதிவுசெய்ய வேண்டியிருந்தது. மொத்தம் 193 மில்லியன் வாக்காளர்களில், 80% பேர் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இத்தகையதொரு நில அமைப்பில், இப்படியானதொரு பெரிய தேர்தலை, ஒரேநாளில் நடத்துவதென்றால், தேர்தல் அலுவலர்களின் நிலைமையை நாம் நினைத்துப் பார்க்காமலேயே புரிந்து கொள்ளலாம்.

எனவே, சரியான ஓய்வின்றி, கடந்த 10 நாட்களாக இரவு-பகல் பாராமல் பணியாற்றியதால், கடந்த சனிக்கிழமை வரையான நிலவரப்படி மட்டும் 272 தேர்தல் அலுவலர்கள் உயிரை விட்டுள்ளனர் மற்றும் 1,878 பேர் சோர்வு மற்றும் களைப்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி