சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஒரேயொரு சதமடித்தால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்கின் சாதனையை, விராத் கோலி முறியடிக்கலாம்.

ஒரு கேப்டனாக, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என்று மொத்தமாக சேர்த்து, சர்வதேச கிரிக்கெட்டில் 41 சதங்களை அடித்துள்ளார் ரிக்கிப் பாண்டிங். இந்தியக் கேப்டன் விராத் கோலியும், தற்போதைய நிலையில் 41 சதங்களை அடித்துள்ளார்.

எனவே, இங்கிலாந்துக்கு எதிரான நீண்ட தொடரில், ஒரேயொரு சதம் அடித்தால் போதும். ஒரு கேப்டனாக அதிக சர்வதேச சதங்கள் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற மகுடம் விராத் கோலியின் தலையில் சூட்டப்படும்.

விராத் கோலி இதுவரை, மொத்தமாக 423 சர்வதேச போட்டிகளை ஆடியுள்ளார். அதில், 188 போட்டிகளை கேப்டனாக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 41 சதங்கள் அடிக்க, ரிக்கி பாண்டிங்கிற்கு 324 சர்வதேச போட்டிகள் தேவைப்பட்டன. ஆனால், வெறும் 188 சர்வதேச போட்டிகளிலேயே 41 சதங்களை அடித்துவிட்டார் விராத் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.