டில்லி

நாடெங்கும் கிறித்துவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக  ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கிறித்துவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.   மத ரீதியாகத் தாக்குதல் நடத்துவதற்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கும் சட்டங்கள் உள்ள  போதிலும் இந்த தாக்குதல்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒரு சமூக நலத் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.    அதில் காணப்படும் விவரங்களை இங்கு காண்போம்.

கிறித்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது சமுதாயத்துக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்  இந்த வருடம் செப்டம்பர் வரை 247 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  அதில் 28 வழக்குகள் மட்டுமே  பதியப்பட்டுள்ளன.  சொல்லப்போனால் செப்டம்பர் மாதம் மட்டுமே கிறித்துவர்களுக்கு எதிராக 29 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிக அளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளன.    சென்ற வருடம் செப்டம்பர் வரை அம்மாநிலத்தில் 60 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.   அதற்கு அடுத்த படியாகத் தமிழகத்தில் 47 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.    அதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் 25, ஜார்க்கண்டில் 21,  கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 18 சம்பவங்கள் நடந்துள்ளன.

இவ்வாறான தாக்குதல்கள் கடந்த 5 வருடங்களாக மிகவும் அதிகரித்து வருகின்றன.  கடந்த 2014 ஆம் ஆண்டு 147 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.  அதைத் தொடர்ந்து 2015ல் 177, 2016ல் 208, 2017ல் 240 மற்றும் 2018ல் 292 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

அதிக அளவில் தாக்குதல்கள் நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளும் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.