டில்லி
தினமும் காலையில் பீகாரில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி டில்லிக்கு வருகின்றனர். அவர்களின் கண்ணீர்க் கதை இதோ :
டில்லி ரெயில் நிலையம் காலை 5.30 மணிக்கு முழித்துக் கொள்கிறது, பின் நள்ளிரவுக்கு மேல் தான் சந்தடி அடங்குகிறது. தினமும் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் பீகார் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு வருகிறது. எல்லா ரெயிலும் வரும் முன்பே போர்ட்டர்கள் பரபரப்பாவது வழக்கம், ஆனால் இந்த ரெயில் வருவதை அவர்கள் சட்டை செய்வதே இல்லை. காரணம் இதில் வருபவர்கள் அனைவருமே வேலை தேடி டில்லிக்கு வருபவர்கள். யாரும் பெரிய லக்கேஜுடன் வருவதில்லை.
ரெயில் வந்ததும், படிகளிலும் அமர்ந்துள்ள இளைஞர்கள் பிளாட்பாரத்தில் ரெயில் நிற்கும் முன்பே குதித்து இறங்குகிறார்கள். ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் அப்படி ஒரு நெரிசல். சிலர் இறங்க வழியே இல்லாமல் கம்பி இல்லாத ஜன்னல் வழியாக எல்லாம் இறங்குகிறார்கள். அனைவரின் லக்கேஜும் ஒரு சிறிய கைப்பை அல்லது முதுகுப்பை மட்டுமே. சிலர் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவாக உள்ளனர்.
அதில் ஒருவரான முகமது ஃபெரோஸ் என்னும் 19 வயது இளைஞர், “இப்போதுதான் முதல் முறையாக டில்லிக்கு வருகிறேன். எனது பெற்றோர் விவசாயக் கூலிகள். எங்களுக்கு கிராமத்தில் ஒன்றுமில்லை. நான் இதற்கு முன் கொல்கத்தாவில் ஒரு பிரிண்டிங் பிரசில் வேலை செய்துள்ளேன். இங்கும் அதுபோல ஒரு வேலை தேடி வந்துள்ளேன் என்கிறார்.
மற்றொரு இளைஞரான சுரேஷ்குமார் சாஹா ”நான் ஐந்து வருடங்களாக டில்லியில் தையல் வேலை பார்க்கிறேன். மாதச் சம்பளம் என்பது ரூ 5000 – 6000 தான். ஆனாலும் எனது கிராமத்தில் இருப்பதை விட இங்கு மகிழ்ச்சியாகவே உள்ளேன்” என்கிறார். இவர்களின் பயணம் இத்துடன் முடிவடைகிறது.
ஆனால் மனோஜ் மண்டல் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளார். இவர் இன்னொரு பேருந்தில் ஏறி பதிந்தா என்னும் இடத்தில் உள்ள இவர் பணிபுரியும் கட்டிடம் கட்டும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
மனோஜ் 12 வருடத்துக்கு முன் தனது சொந்த கிராமத்தை விட்டு வந்து கூலி வேலை செய்கிறார். மாதம் ரூ. 15000 வரை சம்பாதிக்கிறார். திருமணமாகி குழந்தைகளை பதிந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறார். இவரிடம் ஒரு மூட்டை அரிசி மற்றும் பல பொருட்கள் உள்ளன. ஆனால் போர்ட்டர் வைக்க பணமின்றி மூட்டையைத் தானும் மற்ற பொருட்களை குடும்பத்தாரிடமும் கொடுத்து சுமக்க வைத்து அழைத்துச் செல்கிறார்.
இவர்கள் வெறும் மாதிரிகளே. அனைவருக்கும் டில்லியில் வந்து பெரிய மனிதனாக வேண்டும் என்னும் கனவுகள் கண்ணில் தெரிகின்றன. ஆனால் எத்தனை பேரின் கனவுகள் பலிக்குமோ என்பது யாராலும் சொல்ல முடியாது.