டில்லி
கொரோனாவால் மரணம் அடைந்தோரில் 53% மேற்பட்டோர் 60 வயதைத் தாண்டியவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி உள்ளது. அதே வேளையில் மற்ற நாடுகளை மரணம் அடைந்தோர் விகிதம் குறைவாகவும், குணமடைவோர் விகிதம் அதிகமாகவும் உள்ளதால் மக்களிடையே சற்று நிம்மதி நிலவுகிறது.
நேற்றுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1.45 லட்சமாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 95.80 லட்சமாகவும் உள்ளது. மரணமடைந்தோரில் 45 வயதுக்கு அதிகமானோர் விகிதம் சுமார் 60%க்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 53%க்கும் அதிகமாக உள்ளனர். இந்த வயதில் சாதாரணமாக மரணமடைவோரை விட கொரோனாவால் சுமார் 19% அதிகமாக மரணம் அடைகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், “முதல் கட்டமாக எதிர்ப்புச் சக்தி இன்மையால் மரணமடைவோர் எண்ணிக்கையைக் குறைக்க எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் கட்டமாகத் தடுப்பூசி செலுத்துவதைக் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு உடனடியாக தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த மக்களை அவர்களுடைய பணி, வயது, கொரோனா தாக்க அதிகம் வாய்ப்புள்ள சுகாதார முன் வரிசை பணியாளர்கள் என்னும் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளோம்.
அதன் பிறகே இளைய சமுதாயத்தினருக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போதுள்ள நிலைமையில் வயது முதிர்ந்தோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தொற்று அச்சுறுத்தல் அதிகம் உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று ஏற்படும் முதியோரில் பலருக்கு வேறு சில உடல் நலக் குறைபாடுகள் இருந்துள்ளன. அவர்களுக்குத் தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.