ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் மாநில முதல்வர் அளிக்கும் திருமண உதவித் திட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளார்கள் என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது.    அதனால் பல பெண்கள் திருமணமாகாமல் உள்ளனர்.    பெரும்பாலானோர் பயங்கரவாதத் தாக்குதலினால் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்தவர்கள் ஆவார்கள்.    மேலும் மிகவும் அங்கு வாழ்வாதாரம்  ஏதும் இல்லாததால் பல பெற்றோர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர்     அதனால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியது.

இதையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடந்த 2015ஆம் வருடம் மாநில திருமண நிதி உதவி திட்டம் என ஒன்றை அறிமுகம் செய்தது.    அதன் படி திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு ரூ.25000 ரொக்கம் மற்றும் ஐந்து கிராம் தங்கம் இலவசமாக அளிக்கப்படும் என மெகபூபா முப்தி தலைமையிலான மாநில அரசு அறிவித்தது.    திருமணச் செலவுக்கு வழியில்லாத ஏழைப் பெண்களுக்கு இது பெரும் உதவியாக இருந்தது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில சமூகநலத்துறை அமைச்சர் சாஜத் கனி லோன், “மாநில திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.    இது போல் இன்னும் பல பெண்கள் பயனடைய உள்ளனர்  இந்தத் திட்டம் பல ஏழைப் பெண்களுக்கு திருமண வாழ்வை அளித்துள்ளது என்றால் மிகையாகாது.  இந்த புகழ் அனைத்தும் முதல்வர் மெகபூபா முப்தியையே சேரும்”  என புகாழாரம் சூட்டி உள்ளார்.