டில்லி

நாட்டில் கொரோனாவால் 4,302 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் அதாவது மார்ச் 14 முதல் நாடாளுமன்ற நிதிநிலைக் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடந்து வருகிறது.   இதில் இன்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் ஒரு தகவல் அறிக்கை ஒன்றை அளித்தார்.

அந்த தகவல் அறிக்கையில்,

“கொரோனாவால் ஆதரவிருந்தவர்களுக்காக பி எம் கேர்ஸ் குழந்தைகள் திட்டத்தின் கீழ் உதவி வேண்டி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.  இதில் மார்ச் 14 நிலவரப்படி 8,973 விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.  அவற்றின் மூலம் 4,302 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் 0-6 வயதில் 212 குழந்தைகளும்,6-14 வயதில் 1870 குழந்தைகளும், 14-18 வயதில் 2001 பேரும் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் பி எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.   இவர்களை தவிர 18-23 வயதில் உள்ள 418 பேர் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளனர்.  அவர்களும் பி எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்”

என அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.