சென்னை

தேர்தலில் வாக்களிக்கச் சென்னையில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

 

 

நாளை அதாவது ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதையொட்டி அனைத்து ஊழியர்களுக்கும் நாளைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என் அனைத்து நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெளியூரில் இருந்து வந்து பணி புரிவோர் வாக்களிக்க வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.  மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   இதில் சென்னையில் மட்டும் 3,090 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து 4,22,957 பேர் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். தவிர 54,150 பேர் முன்பதிவு செய்துள்ளனர்