சென்னை: மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றம் பள்ளி நிர்வாகத்தில் கொடுக்கும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க தமிழகஅரசு பிரத்யேக தொலைபேசி எண்ணை வெளியிட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீது மாணவிகள் புகார் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த தமிழகஅரசு, ஆசிரியரை கைது செய்துள்ளதுடன், பள்ளி நிர்வாகிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க, பள்ளிக்கல்வித்துறையின் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்ஆப் எண் 94447-72222 வெளியிடப்பட்டது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளின் மீதான பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வாட்ஸ்-ஆப் எண்ணில் புகார்கள் குவிந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். சென்னை மட்டுமின்றி, ல் பிற மாவட்டங்களில் இருந்தும், 30-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது ஏராளமான மாணவிகளும் புகார் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.