சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள தளர்வகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியதால், ஜனவரி மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஓட்டல்கள், தியேட்டர்களில், ஜவுளி கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது.
இதையடுத்து ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரவு நேர ஊடரங்கு , ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்வும், வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் அனுமதி வழங்கியது. ஆனால், தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கை உள்பட சில கட்டுபாடுகள் நீடித்து வருகிறது. இவை அனைத்தும் வரும் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைகிறது
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்று சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை திறக்கவும் அனுமதி உள்பட, கலை விழாக்களுக்கும் அனுமதி உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிப்பது, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கட்டுப்பாடுகளை நீக்குவது, புத்தக கண்காட்சி, துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிப்பது, திரையரங்குகளிலும் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவிப்பது குறித்து விவாதித்து அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.