சீனா :
சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
நேற்று ஒரே நாளில் சீனாவில் 71 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 3583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீன.அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.
சீனாவின் ஹீபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் 2600 படுக்கைகளை கொண்ட இரண்டு புதிய மருத்துவமனைகளை புல்லட் வேகத்தில் கட்டி முடித்ததோடல்லாமல் ‘ஹீவோசென்சான்’ என்ற இடத்தில் கட்டிய மருத்துவமனையில் செவ்வாய் கிழமை முதல் நோயாளிகளை அனுமதித்துள்ளது.
அதேவேளையில், வைரஸ் பாதிப்பும் அசுர வேகத்தில் இருப்பதால், ஹீபே மாகாண நிர்வாகம் நேற்று, வுஹான் நகரின் பல்வேறு பகுதியில் அமைந்திருக்கும் பொது இடங்களான, பள்ளிகள், விளையாட்டு திடல்கள், உடற்பயிர்ச்சி கூடங்கள் என மேலும் 10000 புதிய படுக்கைகளை தயார்செய்ய 10 புதிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணியை முழுவீச்சில் நடத்தி வருகிறது.
நகரின் சில இடங்களில் மருத்துவ வசதி குறைவாக இருக்கும்பட்சத்தில், மக்கள் நீண்ட தூரம் செல்வதை தவிர்க்க அங்காங்கே உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.
- சீனாவிலிருந்து திரும்பிய ஆஸ்திரேலியர்கள் – தனித்தீவிற்கு கொண்டுசென்ற சொந்த நாட்டு அரசு!
- இந்தியாவில் பெருகிவரும் புற்றுநோயாளிகள் – புதிய அறிக்கை
கொரோனா வைரஸ் பாதித்ததாக சந்தேகப்படுகிற எந்த ஒரு நபரும் சிகிச்சை கிடைக்காமல் இருக்ககூடாது என்ற நோக்கத்தோடு ஹீபே மாகாண நிர்வாகம் செயல்பட்டுவருகிறது.
பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைக்க, மறுபுறம் மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், நோயாளிகளுக்கான உணவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
சீனா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு வெகுவாக பாராட்டியிருக்கிறது.
இருந்தபோதும், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக மனித உயிர்களை பலிகொல்லும் விதம் மிகுந்த அச்சத்தையும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.