டெல்லி:
ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஸ்வர், ஐதராபாத், ரோபர், ஜோத்பூர், பாட்னா, இந்தூர், மாண்டி, ஜம்மு ஆகிய ஊர்களில் புதிதாக ஐஐடி கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன., இந்தக்கல்லூரிகள் 2017-18 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்ப்பை அதிகரிக்கும் திட்டத்தை நுழைவுத்தேர்வு வாரியத்துக்கும் (JEE board) கல்லூரிகளின் செனட்டுகளுக்கும் முன்மொழிந்துள்ளன.
இந்தக் கல்லூரிகளில் அடிப்படைக்கட்டுமானம் மிகச்சிறப்பாக உள்ளதால் இந்தக்கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கல்லூரிகளுடன் வேறு சில கல்லூரிகளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்காக காத்துள்ளன. ஆக மொத்தம் இந்திய அளவில் ஐஐடி களில் 460 பேர் அதிகளவில் சேர்க்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் அது வேலைவாய்ப்புத் தரும் கல்வியா, அதில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதா, அடிப்படைக்கட்டுமானம் உள்ளதா உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு அந்த கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை செயல்படுத்தவேண்டும் என மத்தியமனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்ப்பு குறித்து அந்தந்த கல்லூரிகளில் இருக்கும் செனட்டுகள் வரும் மார்ச் 31 ம் தேதிக்குள் முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.