வாஷிங்டன்: அமெரிக்காவில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரப்பட்டதால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு முடிவுகள் கூறி இருக்கின்றன.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மலேரியாவுக்கு எதிரான மருந்து பயன்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். ஆனால், இப்போது அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் வேறு மாதிரியாக உள்ளன.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்கப்பட்டவர்களில் அதிகமான இறப்புகள் இருந்தன என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும். இந்த ஆய்வுகள் 368 நோயாளிகளுக்கு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், ஆன் லைனில் வெளியிடப்பட்டது. மேலும், நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசினுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முடிவுகளை மற்ற விஞ்ஞானிகள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.
மொத்தமாக ஏப்ரல் 11ம் தேதி வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மருத்துவ பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவர்களில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் வழக்கமான மருந்துகள் வழங்கப்பட்ட சுமார் 28% பேர் இறந்தனர், 11% பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.
மருந்துகள் வழங்கப்பட்ட 2% பேர் இறந்தனர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டவர்களின் சுவாச முன்னேற்றத்தில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை. ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்ற உறுப்புகளை சேதப்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வு குறிப்புகள் கூறி இருக்கின்றன.
இந்த மருந்து திடீரென மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் இதயத் துடிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாக அறியப்படுகிறது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், பிரேசிலில் விஞ்ஞானிகள் ஒரு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆய்வின் ஒரு பகுதியை நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.