ஐதராபாத்:

ஐதராபாத் மற்றும் ரெங்கா ரெட்டி மாவட்டம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பல பகுதிகளில் மக்கள் தொகையை விட அதிகளவில் ஆதார் அட்டைகள் தயார் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஐதராபாத் மாவட்டத்தில் 2017ம்ஆண்டில் மக்கள் தொகை 43 லட்சம் தான் இருக்க வேண்டும். ஆனால், யுஐடிஏஐ நிறுவனம் 66 லட்சம் ஆதார் அட்டைகளை தயார் செய்துள்ளது. 23 லட்சம் வேறுபாடு உள்ளது.

அதேபோல் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் மக்கள் தொகை 57.4 லட்சமாகும். ஆனால் இங்கு 50.6 லட்சம் ஆதார் அட்டைகள் மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளது. 6.8 லட்சம் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ரெங்காரெட்டி மாவட்ட எல்லை யோரம் வசிப்பவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தலைநகரமான ஐதராபாத் மாவட்ட புள்ளியியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஐதராபாத்தில் ஆதார் அட்டை எண்ணி க்கை அதிகமாவும், ரெங்காரெட்டி மாவட்டத்தில் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

2017ம் ஆண்டு ஆந்திராவின் மக்கள் தொகை 5.25 கோடியாக இருக்க வேண்டும். ஆனால், 5.14 கோடி ஆதார் அட்டைகள் மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ம் ஆண்டு எடுக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டதாகும்.

கிருஷ்ணா, குண்டூர், மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கணக்கெடுப்பில் சேர் க்கப்படவில்லை. அதனால் தான் 2017ம் ஆண்டின் மக்கள் தொகை ஆந்திராவில் குறைவாக உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.