தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பல பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது  மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1,289  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,66,982  ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இதுவரை குணமடைந்தோல்ர மொத்த எண்ணிக்கை  8,46,480 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 9 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,599 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 7,903 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,776 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 262 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை 262 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  447 பேர் சிகிச்சை உள்ளதாக மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று  மேலும்  17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  பள்ளி மாணவர்கள் 12, கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மேலும் 9 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகி உள்ளது . இன்று கும்பகோணம் சரஸ்வதி பள்ளியில் 10, மாரியம்மன் வீதி அரசு பள்ளியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.