தென்கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார் மூன் ஜா இன்!

Must read

Moon Jae-in: South Korea’s new president sworn in

தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜாஇன் பதவியேற்றார். செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் 41.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரான ஹாங் பூன் பியோ 21.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் பதவியேற்றுள்ளார். ஆனால், வடகொரியாவைப் பொறுத்தவரை, தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் தேர்வு செய்யப்படுவதையே விரும்பியது. எனினும், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் இதுவரை மூன் அதிபரானது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தென்கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன், 50களில் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு அகதியாக குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். மனித உரிமைகளுக்காக  சட்டரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும், தாராளமய தத்துவார்த்த சிந்தனை கொண்ட வழக்கறிஞரும் ஆவார்.

மூனின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர், தென்கொரியாவுடனான உறவை மேம்படுத்தவும், வலிமைப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் முந்தைய அதிபர் பார்க் ஜென் ஹை ஊழல்புகார்  காரணமாக பதவி விலக நேர்ந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.

More articles

Latest article