சென்னை:
மாதம்தோறும் மின் கணக்கீடு எப்போது? என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கின்றனர். இதன் அடிப்படையில் பொதுமக்கள் இருமாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர்.
இதற்குப் பதில் மின் கணக்கீட்டை துல்லியமாக கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.
தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இப்பகுதியில் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
மாதம்தோறும் மின் கணக்கீடு எப்போது, ஸ்மார்ட் மின்மீட்டர் முறையில் குழப்பம் உள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின் மாதம்தோறும் மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும்.” என்று கூறினார்.