சென்னை,
பருவ மழை தொடங்க இருப்பதால் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை குழு அவசர ஆலோசனை நடத்தியது.
சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை குழுவினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு தினங்களில் தொடங்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த வருடம் போல ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என தமிழக பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை நடத்தியது. மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் தமிழக அரசின் வருவாய்த்துறை கமிஷனர் சந்திரமோகன், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 18பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை குழுவை அமைத்தார். இந்த குழுவில் 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் மழை – வெள்ள பிரச்சினைகளை சமாளிப்பது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்குவர்.
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக்குழு அவசர ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை எழிலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் திருமலைவாசன், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் தேவேந்திர ஜலிஹல், திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி கழக பேராசிரியர் மோசஸ் சாந்தகுமார், ஓய்வு பெற்ற தலைமை என்ஜினீயர்கள் முரளிதர் ராவ், வி.ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி குகானந்தம் உள்பட 18 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பருவமழைக்காலத்தையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பருவமழை இயல்புக்கு அதிகமாக பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தால் துறைகள் வாரியாக என்னென்ன பணிகளை செய்யவேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டன.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் தமிழக அரசின் வருவாய் கமிஷனர் சத்யகோபால் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழு ஆலோசித்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, எங்களுடைய செயல்பாட்டை தொடங்கி விட்டோம். எங்கள் குழுவில் 18 துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.