சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் பல பகுதிகளில் லேசனாது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், வங்கக்கடல், குமரிக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக பருவமழை மீண்டும் தீவிரமடைவதாகவும், அதன் காரணமாக, இன்றுமுதல் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (நவ.20) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21, 22, 23, 24-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 25-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 22-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வரும் 23-ம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 11 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 9 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், பேச்சிப்பாறையில் 6 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 5 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வாலிநோக்கம், புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.