திருவனந்தபுரம்:
கேரளாவில் அடுத்த 24மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து விவசாயிகளும், பொது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த 24மணி நேரத்திற்குள் தென்மேற்க பருவ மழை தொடங்கும் என்றும், கொல்லம் ஆலப்புழா உள்பட சில மாவட்டங்களில் 9-ம் தேதி மழை பெய்யும் என்றும், திருவனந்தபுரம் உள்பட வேறு சில 5 மாவட்டங்களில் வருகிற 10-ம் தேதி மழை பெய்யும் என்றும் தெரிவித்து உய்ளளது. மேலும் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, கேரள அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கேரளாவில் மழை தொடங்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.