சென்னை:  தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் நாளை முதல் விமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு ஐநாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. . இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக ஆகஸ்டு  14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து  மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும்  கண்காணிக்கும்படி உஷார் படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள்   வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்த  நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,  ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள். ஸ்கேனிங், ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.