ஊத்தங்கரை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பட்டுவாடா, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக  அணைக்கட்டு தொகுதியில் 3 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அதுபோல, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டிருந்த கிருஷ்ணகிரி அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் வேலழகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில், ஏபி. நந்தகுமார் போட்டியிடுகிறார். அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக,  வாக்காளர்களுக்கு  பணப்பட்டுவாடா செய்ய முயன்ற பாமக-வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூரைச் சேர்ந்த பாமக முன்னாள் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், சதீஷ் மற்றும் கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, ஊத்தங்கரை அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு  கொடுங்கக வைத்திருந்த  ரூ.3.53 லட்சம் தேர்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து,  ஊத்தங்கரையில் உள்ள அதிமுக பிரமுகர் ராமு வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிமுக பிரமுகர் வீட்டில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தின் நண்பர்கள் வெடியரசம்பாளையத்தினை சேர்ந்த செங்கோட்டையன் மற்றும் அவரது மகன் வெங்கடாச்சலம். இவர்கள் வெப்படை பகுதிகளில் சோலா ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்கள்.  அங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் நண்பர் வெங்கடாசலம் வீட்டில் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா  செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.