சென்னை:

மிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 28ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பார் கவுன்சில் தேர்தலில் பணமழை கொட்டுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பார் கவுன்சில்  தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவும், கண்காணிக்கவும்  ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவை ஏற்படுத்த வேண்டும், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விஜயன் ஆஜராகி வாதாடினார்.

அப்போது,  பார்கவுன்சில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்தது பற்றி நாங்கள் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அவர் தேர்தலை நடத்தும் அதிகாரி மட்டும்தான். ஆனால்   இந்த தேர்தலில் பணம் விளையாடுகிறது. தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா நடைபெற்று வருகிறது.

அதுபோல இரு சக்கர வாகனங்களும்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவ்ல கிடைத்துள்ளது. வழக்கறிஞர்கள் விலை பேசப்பட்டு வருகின்றனர். எனவே, தேர்தல் நியாயமாக நடைபெற, தேர்தலை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து,  அகில இந்திய பார்கவுன்சில் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி தனத தரப்பு வாதத்தை வைத்தார். அப்போது,   தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றார்.

அதையடுத்து, அட்வகேட் ஜெனரலும், பார்கவுன்சில் தலைவருமான விஜய் நாராயண் ஆஜராகி வாதாடினார். அப்போது,  இந்த தேர்தலில் ஒரு வாக்குக்கு 30 ஆயிரம் வரை விலை பேசி  வைத்துள்ளனர்.

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள், இந்த தேர்தலுக்காக ரூ.3 கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளனர்  என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு வரும்  24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த வழக்கில் நாங்கள் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பது குறித்து உச்சநீதி மன்றத்தில் விளக்கம் கேட்டு தெரிவியுங்கள் என்று கூறி வழக்கின் விசாரணையை   பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.