டில்லி
ஏடிஎம் களில் இருந்து பணம் எடுக்க இன்னும் மூன்று மாதங்களுக்குச் சேவை கட்டணம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானம், உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நாடெங்கும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால் பலரால் பணி புரிய இயலாத நிலை ஏற்பட்டதால் பொருளாதார பாதிப்புகள் உண்டாகி இருக்கிறது.
எனவே இதற்கான நிவாரணம் குறித்து ஆராய்ந்து அறிவிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இன்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து சில அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில்
”வரும் ஜூன் 30 வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
காலதாமதாக தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கான வட்டிவிகிதம் 12% இருந்து 9% ஆகக் குறைக்கப்படுகிறது
வரும் ஜூன் 30 வரை மார்ச்,ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜி எஸ் டி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது.
கணக்கு சமர்ப்பிக்கும் அபராதம் ரூ.5 கோடிக்குக் கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஆதார் மற்றும் பான் அட்டை இணைப்புக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.
அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து வங்கி ஏடிஎம் களிலும் வேறு வங்கிகளில் டெபிட் கார்ட் மூலம் சேவை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
வங்கிக் கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் வைத்துக் கொள்ள அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.