“அம்மா நான் திருடலம்மா” 15 ரூபாயால் ஒரு தற்கொலை

பேக்கரி கடை ஓனர் வெளியே போயிருந்த நிலையில் அருகே மூன்று சிப்ஸ் பாக்கெட்டுக்களுடன் நின்று கொண்டிருக்கிறான்
ஒரு 13 வயது சிறுவன்.
தூரத்தில் இருந்து பார்க்கும் ஓனர், அந்த சிறுவன் தனது கடையில் திருடி விட்டதாக நினைத்து அவனைப் பிடித்து திட்டுகிறார்.
கடைக்காரருக்கு ஆதரவாக அங்கு இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சிறுவனை சகட்டுமேனிக்கு பேசுகின்றனர்.
கடைசியில் மூன்று சிப்ஸ் பாக்கெட் களுக்காக அந்த சிறுவனிடம் இருந்த 20 ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு மீதி ஐந்து ரூபாயை தந்து விரட்டி அடிக்கிறார் பேக்கரி ஓனரான சுபாங்கர் தீக்ஷித் .
அவமானத்தால் கூனி குறுகிப்போன சிறுவன் வீட்டுக்கு சென்று, தன் தாயிடம் விசயத்தை சொல்ல தாயார் கடைவீதிக்கு வந்து அனைவரிடமும் சண்டையிடுகிறார். அதன் பிறகு தாயும் மகனும் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், எதிர்பாராத ஒரு சம்பவம்.
“அம்மா, நான் திருடவே இல்லை” என்று எழுதி வைத்துவிட்டு சிறுவன் தற்கொலைக்கு போய் இருக்கிறான். பதறிப்போன தாயார், துடிதுடித்துக் கொண்டிருந்த மகனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டான்.
வெறும் 15 ரூபாய் மதிப்பில் உள்ள மூன்று சிப்ஸ் பாக்கெட் களுக்காக ஏற்பட்ட தகராறு கடைசியில் ஏழாம் வகுப்பு சிறுவனின் உயிரையே குடித்திருக்கிறது.
கிருஷ்ணனெந்து என்ற 13 வயது சிறுவனின் தற்கொலைக்கு யார் காரணம் என்று மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பன்ஸ்குரா என்ற இடத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை இப்போது போய்க்கொண்டிருக்கிறது.
பதின் வயதில், அதாவது டீன் ஏஜில் உள்ளவர்களை பொதுவெளியில் அவமானப்படுத்துவதோ முரட்டுத்தனமாக டீல் செய்வதோ அவர்களின் மனநிலையை பாதித்து விரும்பத்தகாத விளைவுகள் தான் ஏற்படும் என்று சொல்வார்கள்.
அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த 13 வயது சிறுவனின் தற்கொலை சம்பவம்.
– செய்திப் பிரிவு