மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் வன்கொடுமை புகாரை அடுத்து நடிகர் சித்திக் பதவி விலகியதை அடுத்து, பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெகதீஷ் பரிசீலிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக நடிகர் சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ஜெகதீஷ், ஜெயன் சேர்த்தலா, பாபுராஜ், கலாபவன் ஷாஜோன், சுராஜ் வெஞ்சரமூடு, ஜாய் மேத்யூ, சுரேஷ் கிருஷ்ணா, டினி டாம், அனன்யா, வினு மோகன், டொவினோ தாமஸ், சரயு, அன்சிபா மற்றும் ஜோமோல் ஆகியோர் கலைக்கப்பட்ட இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மலையாள திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சம்பவங்களைத் தொடர்ந்து தார்மீக அடிப்படையில் செயற்குழு கலைக்கப்படுவதாக நடிகர் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சங்கத்தை மறுசீரமைக்கவும் வலுப்படுத்தவும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தலுக்குப் பிறகு புதிய குழு அமைக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.