அம்ரோகா, உத்திரப் பிரதேசம்
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் ஹசின் காஜா என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார்.
கடந்த ஆண்டு முகமது ஷமிக்கும் ஹசின் காஜாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பல பெண்களுடன் கள்ள உறவு வைத்துள்ளதாகவும் ஹசின் காஜா குற்றச்சாட்டுகள் சுமத்தினார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
முகமது ஷமி மீதான சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு அளித்துள்ளது. முகமது ஷமி தற்போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோகா நகரில் உள்ள ஷகாஸ் அலி நகர் என்னும் பகுதியில் தன் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு இந்த வீட்டுக்கு ஹசின் காஜா தனது மகனுடன் திடீரென சென்றுள்ளார். அந்த வீட்டுக்குள் அத்து மீறி நுழைய முயன்றன் ஹசின் காஜாவை அவர்கள் த்டுத்துள்ளனர். அதனால் அவருக்கும் ஷமியின் தாய் மற்றும் சகோதரருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
தங்கள் வீட்டுக்குள் அத்து மீறி நுழைய முயன்று தகராறு செய்ததாக ஹசின் காஜா மீது ஷமியின் தாய் மற்றும் சகோதரர் காவல்துறையிடம் இன்று காலை புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஹசின் காஜா கைது செய்யபட்டுள்ளார். அவரை காவல்துறையினர் நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்த உள்ளனர்.