சென்னை: போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த திரைப்பட தயாரிப்பாளர், ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து, அவரை திமுக தலைமை, தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ள நிலையில், தற்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை சமீபத்தில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில், திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், அவரது சகோதரரும், விசிகவை சேர்ந்தவருமான முகமது சலீம், நடிகர் மைதீன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக், முகமது சலீம் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் தேவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை மாவட்டம், மையசென்னை மண்டல துணைச் செயலாளர் திரு அ.முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவருவதால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.