பெங்களூரு
நேற்று பெங்களூருவில் பிரதமர் மோடி இந்தியில் பேசிய போது மொழி பெயர்ப்பாளர் இல்லாததால் பலரும் புரியாமல் திண்டாடி உள்ளனர்.
தென் இந்திய மாநிலங்களில் வடநாட்டு தலைவர்கள் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் போது மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இடம் பெறுவார். கடந்த வருடம் டிசம்பரில் பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் ராஜ்நாத் சிங் பேசிய போது கன்னட மொழி பெயர்ப்பாளர் இடம் பெற்றிருந்தார். ஆனால் சித்ரதுர்க்காவில் நடைபெற்ற அமித் ஷாவின் பேரணிக்கும், நேற்று பெங்களூருவில் நடந்த மோடியின் பேரணிக்கும் மொழி பெயர்ப்பாளர்கள் இடம் பெறவில்லை.
சித்ர துர்க்காவில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா பேசிய போது அவர் இந்தியில் ‘எடியூரப்பா பிரதமராக உங்களுக்கு விருப்பமா’ என மக்களை கேட்டார். மொழி புரியாத மக்கள் ‘இல்லை’ என பதிலளித்தது அப்போது பாஜகவினருக்கு அதிர்ச்சி அளித்தது. அதே போல் நேற்று மோடி பேசும் போது ஒரு சில கன்னட வார்த்தைகளை ஆரம்பத்திலும் முடிவிலும் கூறி விட்டு மீதமுள்ள உரை முழுவதும் இந்தியில் நிகழ்த்தினார். அவருடைய இந்த இந்திப் பேச்சு பாஜக தலைவர்களிலேயே பலருக்கு புரியவில்லை.
இது குறித்து பாஜக தரப்பில் மோடியின் உரையின் போது நேரமின்மை காரணமாகவும், பேச்சில் குறுக்கீடு தேவை இல்லை எனவும் கருதியதால் மொழி பெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அரசியல் நோக்கர் சந்தீப் சாஸ்திரி, “மொழிபெயர்ப்பு என்பது ஒரு குறுக்கீடு தான். ஆனால் இந்தியில் உரையாற்றுவது தென் இந்திய மக்களுக்கு போய் சேர மொழி பெயர்ப்பு அவசியமாகும். “ எனக் கூறி உள்ளார்.
கன்னட ஆர்வலர், அனந்த குரு, “இந்தி மட்டும் அல்ல ஆங்கிலமும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப் படவேண்டும். பாஜக இந்தி மூலம் நாட்டில் ஒற்றுமை உண்டாகும் என கருதலாம். ஆனால் தென் இந்திய மக்கள் அவ்வாறு எண்ணவில்லை. எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் கன்னடத்தில் மொழி பெயர்த்தால் மட்டுமே அவர்கள் கருத்து எங்களுக்குப் புரியும். அவர்களை கன்னடத்தில் பேச சொல்லவில்லை. உதாரணத்துக்கு மோடி அவர் தாய் மொழியான குஜராத்தியில் பேசட்டும், அதை கன்னடத்தில் மொழி பெயர்க்கட்டும்” எனக் கூறி உள்ளார்.
ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை இந்த வார இறுதியில் கர்னாடகாவில் தொடங்க உள்ளார். அப்போது இதை காங்கிரஸ் கருத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.