
டில்லி
நேற்று சுதந்திரதின விழாவில் மோடி புதிய அறிவிப்புகளை விட பல சாதனைகளை பட்டியல் இட்டிருந்தார் அவற்றின் உண்மை நிலைகளை பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று செங்கோட்டையில் மோடி ஆற்றிய சுதந்திர தின உரை அளவில் சிறிது என சொல்லப்பட்ட போதிலும், புதிய திட்டங்களின் என்ணிக்கையும் மிகக் குறைவாகவே காணப்பட்டன. அதே நேரத்தில் அரசின் சாதனைகளாக எரிவாயு முதல் மகப்பேறு விடுமுறை வரை பலவும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இணைய ஊடகங்கள் அந்த சாதனைகளின் உண்மை நிலையை பற்றி தெரிவித்துள்ளன.
அவை பின் வருமாறு :
உரை : கடும் உழைப்பின் காரணமாக ஜி எஸ் டி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தொழில்நுட்பம் மூலமே இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. உலகம் எங்கும் உள்ள மக்கள் நமது நாடு குறுகிய காலத்தில் வெற்றியை எட்டியதைக் குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
உண்மை நிலை : இது அதிசயம் அல்ல. பல மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நடந்த ஒரு நிகழ்வு. இது குறுகிய காலமும் அல்ல, பலவருடங்களில் போடப்பட்ட திட்டங்களின் அமுலாக்கமே. அதே போல இந்த திட்டம் இன்னும் முழுவடிவம் அமையாத நிலையில் அயல்நாடுகள் வெற்றியை புகழ வாய்ப்பே இல்லை. ஐரோப்பிய நாடுகளில் இந்த திட்டம் 1963ல் தொடங்கப்பட்டு 1985ல் முழு வடிவம் பெற்று, 2006ஆம் வருடம் முழுமையானது.
உரை : புதிய திட்டங்களின் மூலம் தற்போது சாலை போடும் பணிகள் இரண்டு மடங்கு வேகத்தில் நடை பெறுகிறது.
உண்மை நிலை : தவறு. பிரதமர் எந்த வருடத்தோடு ஒப்பிட்டு இரண்டு மடங்கு வேகம் என தெரிவிக்கிறார் என்பது குறிப்பிடப் படவில்லை. மத்திய அமைச்சகத்தின் தகவல்படி, 2001 முதல் உள்ள காலத்தில் மிக வேகமாக சாலை போடும் பணி 2012-13ஆம் வருடம் மட்டுமே வேகமாக செயல்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலைகள், மாநில மற்றும், உள்ளூர் சாலைகளையும் உள்ளடக்கியதாகும்
உரை : ரெயில்வே இருப்புப் பாதைகள் அமைக்கும் பணி இரண்டு மடங்கு வேகத்தில் நடை பெறுகிறது
உண்மை நிலை : தவறான தகவல். மீண்டும் பிரதமர் எந்த வருடத்துடன் ஒப்பிட்டு சொல்கிறார் என்பது தெரியவில்லை. 2011-12ஆம் வருடம் மட்டுமே வேகமாக இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
உரை : சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் இருளில்மூழ்கி இருந்த 14000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டது
உண்மை நிலை : ஓரளவு உண்மை. கணக்கெடுப்பில் காணப்பட்ட 18452 கிராமங்களில், 14834 கிராமங்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் நான்கில் ஒரு வீட்டுக்கு இன்னும் இணைப்பு தரப்படாமல் உள்ளது. தற்போது 99%க்கும் மேல் உள்ள கிராமங்களில் மின் இணைப்பு உள்ள போதும்,அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை என மத்திய மின் வாரியம் தெரிவித்துள்ளது.
உரை : 29 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் வங்கிக் கணக்கு துவக்கி உள்ளனர்.
உண்மை நிலை : ஓரளவு உண்மை. 2017ஆம் வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை 29.48 ஜன் தன் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் மூன்றில் ஒரு பங்கு வாடிக்கையாளர்களுக்கு இதை தவிரவும் வங்கிக் கணக்குகள் உள்ளன என ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
உரை : சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கப்பட்டு விவசாயம் மேம்படுத்தப்பட்டுள்ளது
உண்மை நிலை : ஓரளவு உண்மை. 9.06 கோடி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கப்பட்ட போதிலும், 2.5 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான பரிசோதனை விவரங்கள் அந்த அட்டையில் பதியப்பட்டுள்ளன.
உரை : சுமார் 2 கோடிக்கும் அதிகமான தாய்மார்கள் விறகு அடுப்பை கைவிட்டு கேஸ் அடுப்புக்கு மாறி உள்ளனர்.
உண்மை நிலை : ஓரளவு உண்மை மொத்தம் 2.5 கோடி புதிய கேஸ் இணைப்பு உஜ்வாலா திட்டத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டர் விற்பனை நிலைப்படி அனைவரும் புதிய சிலிண்டர்களை வாங்கவில்லை என தெரிகிறது.
உரை : சுமார் ரூ 8 கோடி வரை புதிய தொழில் முனைவோருக்கு கடன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
உண்மை நிலை : தவறு, ரூ 7.46 கோடி வரை முத்ரா திட்டத்தின் மூலம் வங்கிகளின் மூலமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 40% கடன்கள் புதிய கடன்கள் இல்லை.
உரை : எனது தாய்மார்களும், சகோதரிகளும், வேலை வாய்ப்பின்றி தவிப்பதை போக்க தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டு, இரவு நேர வேலைகளும் பெண்களுக்கு வழங்க வழி செய்யப்பட்டுள்ளது
உண்மை நிலை : இது உண்மையே. முன்பிருந்த தொழிலாளர் சட்டத்தை மாற்றி, இயந்திரங்கள் இயக்கவும், இரவு நேர வேலை வாய்ப்பை வழங்கவும் அரசு வழி செய்துள்ளது.
உரை : தாய்மார்கள் மட்டுமே ஒரு குடும்பத்தின் ஆணி வேர்கள். அத்தகைய தாய்மார்களுக்கு மகப்பேறு விடுமுறை 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
உண்மை நிலை : ஓரளவு உண்மை. சட்டத்திருத்தம் இதை அனுமதித்தாலும், அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு இந்த விடுமுறை சட்டம் பொருந்தாது. பெரும்பாலான பெண்கள் அமைப்பு சாரா பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இணையங்கள் தெரிவிக்கின்றன.