சென்னை:  மத்தியில் மோடியின் ஆட்சியை போன்று, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமையும்”   செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. இதில் சில கட்சிகள் இணைந்துள்ளது. மேலும், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நாளை (23ந்தேதி) சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம்  நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். அதற்கு முன்பு கூட்டணியை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக மத்திய  அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வந்து முகாமிட்டு உள்ளார். இங்குள்ள கூட்டணி  கட்சி தலைவர்களை சந்தித்துபேசி வருகிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்களுக்கு  ருந்து அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில், நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானசி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமியுடன் செய்தியாளர்களிடம் பேசிய  பியூஸ்கோயல்,  ” எடப்பாடி பழனிசாமி என் நீண்ட கால நண்பர்; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வாழ்த்தை கொண்டு வந்தேன். மத்தியில் மோடியின் ஆட்சியை போன்று, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமையும்” என்றார்.

மேலும், உதயநிதியின் சனாதன பேச்சு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் கோயல்,  உதயநிதியின் தேச விரோத கருத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். உதயநிதியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் உதயநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்தும் பேச்சுக்காக உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை என அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டனர். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுவதுமாக வீழ்த்தி, அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையடுத்து  பேசிய எடப்பாடி பழனிசாமி , தங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி என்றும,  நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பெரிய மாற்றத்துக்கான கூட்டமாக நாளைய பொதுக்கூட்டம் அமையும். என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றிக்கு பொதுக்கூட்டம் அச்சாணியாக அமையும். பியூஷ் கோயல் எனது இல்லத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

முன்னதாக, சென்னையில் புதன்கிழமை தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் சந்திப்பின்போது கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அன்புமணியின் பாமக, அமமுக இணைந்துள்ள நிலையில், இன்று அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பிரதமா் மோடி தமிழகத்துக்கு  நாளை வருகை தரவிருக்கும் நிலையில், அதற்குள் தோ்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவா்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையிலேயே நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கோயல்,  தேசிய ஜனநாயக கூட்டணியில், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன் ஆகிய அனைத்து தலைவர்களும் ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளனர். அந்த நோக்கம் தெளிவானது. ஊழலிலும் செயலற்ற தன்மையிலும் மூழ்கிய திமுக அரசை அகற்றுவது தான் எங்கள் நோக்கம். தமிழர் பண்பாடு, மொழி, பெருமை, உரிமைகள் மீது தொடர்ந்து திமுக தாக்குதல் நடத்தி வருகிறது.

இனி தமிழகத்தில் இந்த திமுக அரசுக்கு இடமில்லை. இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிராக செயல்படும் திமுக கூட்டணியை நிச்சயமாக நாங்கள் தோற்கடிப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்ட திமுக தலைமைகளுடன் தொடர்புடைய அனைத்து ஊழல்களையும் தமிழ்நாட்டு மக்களின் முன்னிலையில் நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், மக்களுக்கான நல்லாட்சியை வழங்குவோம். பெண்களுக்கு சமூக பாதுகாப்பையும், நலத்திட்டங்களையும் உறுதிப்படுத்துவோம். இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். தமிழ் மொழியின் பெருமை, தமிழ் பண்பாடு, தமிழர் அடையாளத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வோம். இந்த பயணம் புதிதல்ல. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தமிழ்நாட்டுக்கு வழங்கிய நல்லாட்சியை மீண்டும் கொடுப்பதே எங்கள் இலக்கு. அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்கியதை நாம் மறக்க முடியாது” என்றார்.

 

[youtube-feed feed=1]