டில்லி,

பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கி உள்ளார்.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்திருந்த பிரதமர் மோடி, கடந்த வாரம் இலங்கை சென்றார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது வெளிநாட்டு பயணங்களை ஆரம்பித்துள்ளார். ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் 29-ம் தேதி முதல் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜூன் 1-ம் தேதி ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு தொடங்குகிறது.  இந்த மாநாடு 3 நாட்கள்  நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் கலந்துகொள்ள  ரஷியா செல்லவுள்ள மோடி, அத்துடன்  ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளில் அவர் மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

இதையடுத்து வரும் 29-ம் தேதி டில்லியிலிருந்து புறப்படும் மோடி, முதலில் ஜெர்மனிக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து மெர்கெல்லிடம் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மோடி, ஜெர்மனிக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும்.

ஜெர்மனியில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயினுக்கு மே 31-ம் தேதி மோடி செல்கிறார்

அங்கு அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை சந்தித்து மோடி பேச்சு நடத்துகிறார்.

அதன்பின்னரே மோடி ரஷியாவுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டுக்கு  இடையே ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை மோடி சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது கூடங்குளத்தில் அமையவிருக்கும் 5, 6-வது அணு மின்நிலையம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு இதுவரை 27 வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளதாகவும்,  இதன் காரணமாக  சுற்றுப்பயண செலவு ரூ.119.70 கோடி என்றும், அந்த பணம்  மத்திய அரசால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.