கோவை:
கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
உலோகத்தில் அமைக்கப்பட்ட இந்த சிலையை திறக்க, பிரதமர் நரேந்திர மோடி கோவை வர உள்ளதாகவும், மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிலை திறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக, ஈஷா மையத்தில் `ஹெலிபேட்’ அமைக்கும் பணி நடக்கிறது. நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
டில்லியில் இருந்து விமானம் மூலமாக சூலூர் விமானப்படை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஈஷா யோகா மையம் செல்வார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதமே பிரதமர் மோடி ஈஷா யோகா மையத்துக்கு வருவார் என்று தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இம்முறை பிரதமர் மோடி வருவது உறுதி என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.