இந்திய பிரதமர் மோடி நல்ல விஷயங்களுக்காக “U” டர்ன் அடிக்க ஒருபோதும் தயங்க மாட்டார். அவர் சார்க் மாநாட்டுக்கு வருவார், அங்குவந்து நவாஷ் ஷெரீபை தழுவிக்கொள்வார், இந்திய பாகிஸ்தான் உறவு புத்துயிர் பெறும் என்று பாகிஸ்தானின் காஷ்மீருக்கான சிறப்பு தூதர் முஷாஹித் ஹுசேன் சையத் தனது அமெரிக்க பயணத்தின்போது தெரிவித்தார்.
இந்தியா வளரும் நாடு, பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் எனவே இந்தியா போரை விரும்பவில்லை. அதுமட்டுமன்றி மோடி, டெல்லி கலாச்சாரத்தில் ஊறிய மற்ற இந்திய பிரதமர்கள் போல எப்போதும் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு எப்போதும் பனிப்போர் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பவர் அல்ல. இவர் சுதந்திரமானவர், வெளிப்படையானவர் நல்ல விஷயங்களுக்காக “U” டர்ன் அடிக்க தயங்காதவர். நான் சார்க் விஷயத்தில் அவரிடம் அந்த “U” டர்னை எதிர்பார்க்கிறேன். பிரதமர் நவாசுடன் அவருக்கு நல்ல இணக்கமான நட்பு இருக்கிறது.
அதே போல காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் ஆரோக்கியமானது. அது இந்தியாவை சமாதானம் செய்து, பேச்சு வார்த்தைக்கு அந்நாட்டை ஊக்கப்படுத்தி போர் பதற்றத்தை தணித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பதான்கோட் மற்றும் உரி தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாடு இந்தியாவின் புறக்கணிப்பால் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,