வாஷிங்டன்

இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்வதை பலரும் விமர்சித்து வந்தனர்.  கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த வருடத்தில் இருந்து மோடி வங்க தேசம் தவிர வேறு எந்த நாட்டுக்கும் செல்லவில்லை.  இந்நிலையில் பிரதமர் மோடி 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று காலை இந்திய நேரப்படி 4 மணிக்கு வாஷிங்டன் சென்ற அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.   இன்று  பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.   இதன் பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை சந்தித்துப் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்கத் துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை சந்திக்கிறார் பிரதமர் மோடி.   கமலாவுடனான சந்திப்பின் போது இருநாட்டு உறவு. ஆப்கான், சீனா விவகாரம் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளிக்கிழமை அதாவது நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். , மேலும் மோடி குவாட் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.அத்துடன் அவர்  நியூயார்க் சென்று அங்கு ஐநா பொதுச் சபைக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.