டில்லி

ட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உதவுமாறு பிரதமர் மோடி கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது எனவும், இது குறித்து உறுப்பினர்களிடையே கருத்து ஒற்றுமை வேண்டும் எனவும் கூறி இருந்தார்.     அதன் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, “ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும்  போது  மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் அமுல் படுத்த முடிவதில்லை.   மேலும் மக்களவைக்கும்,  சட்டப்பேரவைக்கும் தற்போது தனித்தனியே தேர்தல் நடைபெறுவதால் அரசுக்கு கூடுதல் செலவு உண்டாகிறது.

இதைத் தவிர்க்க நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்  அதற்கு உகந்த சூழலை கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும்”  எனக் கேட்டுக் கொண்டார்.  இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா உட்பட பல கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.