டில்லி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நடந்து வரும் போராட்டம் குறித்து பிரதமர்
மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மோடி தனது பதிவில், ”குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை. அவை எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றன. ஜனநாயகத்தில் விவாதம், கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை இன்றியமையாத பகுதிகள் ஆகும். ஆனால், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாது, சாதாரண வாழ்க்கையைத் தொந்தரவு செய்யாதது ஆகியவை நமது நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை ஆதரித்துள்ளனர். இந்த சட்டமானது இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளான ஏற்றுக்கொள்ளல், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் எந்த மதத்தைச் சார்ந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனையும் பாதிக்காது என்று எனது சக இந்தியர்களுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியளிக்க விரும்புகிறேன். எந்த இந்தியருக்கும் இந்த சட்டம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இந்தச் சட்டமானது பல ஆண்டுகளாக வெளியில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும். அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த இடமும் இல்லை.
நாம் அனைவரும் தற்போது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியரின், குறிப்பாக ஏழைகள், நலிந்தவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் அதிகாரம் ஆகியவற்றிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுவே காலத்தின் தேவை ஆகும். சொந்த காரணங்களுக்காக நம்மைப் பிரித்து நமக்குத் தொந்தரவை உருவாக்க முயலும் குழுக்களை நாம் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.