டில்லி
மோடி வரும் 30 ஆம் தேதி அன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தமிழகம் மற்றும் கேரளாவில் படு தோல்வி அடைந்தது. ஆயினும் வட மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. அதை ஒட்டி பாஜகவின் நாடாளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் 352 இடங்களை தனியாக வென்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள மோடி வரும் 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மற்ற அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கின்றனரா அல்லது அவர் மட்டும் பதவி ஏற்க உள்ளாரா என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த பதவி ஏற்பு விழாவுக்கு வெளிநாட்டினர் அழைக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் அரசு வட்டாரத்தில் அதை உறுதிப்படுத்தவில்லை. கடந்த முறை மோடியின் முதல் பதவி ஏற்பு விழாவில் சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.