டில்லி:

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க பிரதமர் மோடி பூசி மொழுகும் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார் என்று ஹஃப்போஸ்ட் பத்திரிக்கையில் விவேக் கவுல் என்ற பத்திரிக்கையாளர் விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் விபரம்…

‘‘நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறது. இது குறித்து யாரும் கவலை அடைய தேவையில்லை’’ என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். தனது வாதத்தை உண்மையாக்கும் வகையில் அவர் சில புள்ளி விபரங்களை அளித்துள்ளார்.

அதில் நிதி பற்றாகுறை குறைந்திருப்பது உண்மை தான். கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சி தான் இதற்கு காரணம். 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அப்போது ஒரு பேரல் விலை 108.1 டாலராக இருந்தது. இது கடந்த 4ம் தேதி அன்று 55 டாலராக குற¬ந்துள்ளது. அதிகபட்சமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல காரணங்களால் எண்ணைய் விலை உயர்வதும், குறைவதும் இயல்பு. இதில் மோடியின் பங்களிப்பு எதுவும் இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பை அதிகரித்து கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சியின் பயனை மத்திய அரசு நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு வருவாய் அதிகரித்து நிதி பற்றாகுறை குறைந்துள்ளது.

‘‘2013-14ம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாகுறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) -1.7 சதவீதமாக இருந்தது. 2016-17ம் ஆண்டில் இது -0.7 சதவீதமாக குறைந்துள்ளது’’ என்று பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு கணக்கு பற்றாகுறை என்பது இறக்குமதியின் மதிப்பு மற்றும் ஏற்றுமதியின் மொத்த மதிப்பு மற்றும் அந்நிய செலாவணியின் மொத்த வரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. சாதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதி மூலம் வெளியேறும் அளவு, இறக்குமதி மூலம் உள்ளே வந்த அளவு மற்றும் அந்நிய செலாவணியை கொண்டதாகும்.

மேலும், சில தகவல்களை குறிப்பிட வேண்டும் என்றால், நாட்டின் மொத்த உற்பத்தியில் இறக்குமதியின் பங்கு எதிர்மறையான கணக்கீட்டில் உள்ளது. இறக்குமதி குறைந்தால் மொத்த உற்பத்தி தாமாக அதிகரிக்கும். மோடி ஆட்சியில் எண்ணைய் இறக்குமதி குறைந்ததால் தான் மொத்த உற்பத்தி அதிகரித்ததற்கு முக்கிய காரணம். மோடி பதவி ஏற்றபோது அந்நிய செலாவணி பரிமாற்ற கையிருப்பு சுமார் 60 பில்லியன் டாலராக இருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இது ஏறகுறையாக சமநிலையில் இருந்தது.

இது தொடர்பாக மோடி வெளியிட்ட புள்ளிவிபரங்கள் 2011-12ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2003-04ம் ஆண்டு முதல் இந்த புள்ளிவிபரங்கள் எடுக்கப்பட்டால் நிலை என்னவாக இருக்கும்.

2004ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அந்நிய செலாவணி கையிருப்பு 113 பில்லியன் டாலராகும். 2014ம் ஆண்டு மார்ச்சில் இது 304 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 10.4 சதவீதம் சாரசரியாக உயர்ந்துள்ளது.

2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரை அந்நிய செலாவணி கையிருப்பு ஆண்டிற்கு 8.3 சதவீதம் மட்டுமே சராசரியாக வளர்ச்சி அடைந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் அந்நிய செலாவணி கையிருப்பு மிக வேகமாக வளர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான ஆதாயம் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் கிடைத்துள்ளது.

17.4 சதவீத அடிப்படையில் வளர்ச்சி இருந்துள்ளது. 2009-2014ம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் குழப்பமான சூழ்நிலையில் இருந்துள்ளது. ஆண்டிற்கு 3.8 சதவீதம் என்ற அடிப்படையில் அந்நிய செலாவணி குறைந்துள்ளது. இதன் மூலம் மன்மோகன் சிங் திறமையாக செயல்பட்டுள்ளாரா? அல்லது மோடி திறமையாக செயல்பட்டுள்ளாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரசு செலுத்தும் கடனுக்கான வட்டி 2013-14ம் ஆண்டில் 8.45 சதவீதமாக இருந்தது. இது 2016-17ம் ஆண்டில் 7.16 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு 2 காரணங்கள் உள்ளது. நிதிபற்றாகுறையின் வீழ்ச்சி நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கடன் வாங்கும அளவை குறைக்கும். கடன் வாங்குவது குறைந்தால் வட்டி விகிதம் குறையும்.

தற்போது நிதி பற்றாகுறை வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பை அதிகரித்து, எண்ணைய் விலை வீழ்ச்சியை முழுமையாக கைப்பற்றிக் கொண்டதால் தான் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

பணமதிப்பிழப்புக்கு பின் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வங்கியில் டெபாசிட் ஆகியுள்ளது. இது அரசாங்க பத்திரங்களில் மறுமுதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் குறைந்துள்ளது.

உணவு பணவீக்கம் எதிர்மறையான நிலையில் இருப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். இது நல்ல அறிகுறியா?. ஏன் உணவு பணவீக்கம் எதிர்மறையான நிலையில் இருக்கிறது?. இதற்கு விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது தான் காரணம். இதை ஒரு நிலையாக வைத்துக் கொள்ளலாம்.
பணமதிப்பிழப்புக்கு பின் வேளாண் விநியோக தொடர் சங்கிலி முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் மதிய இலவச உணவு இல்லை. உணவு பொருளுக்கு விலை கிடைக்காததல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. இதை ஈடுகட்ட மாநில அரசுகள் வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கியுள்ளது. இதுவும் நாட்டிற்கான செலவு தான்.

இதற்கு அடுத்ததாக நுகர்வோரின் வாங்கும் திறன் குறித்த சில புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார். கார், டூவீலர் விற்பனை, டிராக்டர் விற்பனை ஆகியவை கடந்த ஜூன் முதல் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்தும் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். எண்ணை, தங்கம், வெள்ளி அல்லாத பொருட்களின் இறக்குமதி பணமதிப்பிழப்புக்கு பின் அதிகரித்துள்ளது என்பதை பிரதமர் சொல்லவில்லை.

இறக்குமதி என்பது நுகர்வோரின் தேவையை பொருத்தது. இந்த தேவை மொத்த உற்பத்திக்கு பயனளிக்காது. உதாரணமாக ஒரு இந்தியன் ஒவ்வொரு முறையும் சீனாவின் எலகட்ரானிக் பொருளை வாங்கினால், அது நுகர்வோரின் தேவை தொடர்பானது. இது மொத்த உற்பத்தியில் சேராது. இது சீனாவின் மொத்த உற்பத்தியில் தான் சேரும். ஏற்றுமதி என்பது மட்டுமே மொத்த உற்பத்திக்கு ஆதாயமாக இருக்கும்.

எண்ணை, தங்கம், வெள்ளி ஆகியவற்றை மொத்த இறக்குமதி பட்டியலில் இருந்து எடுத்துவிட்டால் என்ன மீதம் இருக்குமோ அது தான் நுகர்வோரின் தேவையை சுட்டடிக்காட்டும். 2016ம் ஆண்டு அக்டோபருக்கு பின் எண்ணைய், தங்கம், வெள்ளி அல்லாத பொருட்களின் இறக்குமதி வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த வேகம் உள்ளது. அப்படி என்றால், இங்கே என்ன நடக்கிறது?

பணமதிப்பிழப்பு உள்நாட்டு விநியோக தொடர் சங்கிலியை நிலை குலைய செய்துள்ளது. இந்த தொடர் இல்லை என்றால் பொருட்கள் நகராது. இந்த இடைவெளியை இறக்குமதி பொருட்கள் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அதோடு இந்திய அளிவிலும் விநியோக தொடர் சிங்கிலி அழிந்துவிட்டது.

இதனால் பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சரக்குகள் நகரவில்லை என்றால் மேற்கொண்டு உற்பத்தி செய்வதில் என்ன பயன்?. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பெரிய அளவில் வேலை இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களையும் தற்போது இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் தயாரிப்பு தொழிலுக்கு நாம் உதவி செய்து வருகிறோம். அங்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் நாம் உதவி செய்கிறோம்.

 

பிரதமர் சொல்ல மறந்தவை…..

 

* கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான வங்கிகள் வழங்கும் கடன் அளவு சுருங்கியுள்ளது. சில்லரை கடன்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. தொழிற்சாலை, விவசாயம் மற்றும் சேவைகளுக்கான கடன் வழங்குவது சுருங்கியுள்ளது. இதனால் வட்டி வகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தின் பெரிய பிரிவு நல்ல நிலையில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அவர்கள் கடன் பெறவும் தயாராக இல்லை. இது நல்ல விஷயம் கிடையாது.

* கடந்த மார்ச் 31ம் தேதி வரை 27 பொதுத்துறை வங்கிகளில் 22ல் வராக்கடன் அளவு 10 சதவீத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. அப்படி என்றால் இந்த வங்கிகள் கொடுத்த ஒவ்வொரு 100 ரூபாய் கடனுக்கும் 10 ரூபாய்க்கு மேல் திரும்பி வரவில்லை.

இதில் 5 வங்கிகளின் வராக்கடன் 20 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இந்த வங்கிகள் வழங்கிய 5ல் ஒரு பங்கு கடன் வராக்கடனாக உள்ளது. இந்த விதமான பிரச்னைகள் மட்டுமே மோடி ஆட்சியில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மீது தான் மோடியும், அவரது அரசும் உட்கார்ந்து கொண்டு முந்தை அரசை குறை கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

*கறுப்பு பணம் மீதான தாக்குதலால் ரியல் எஸ்டேட் விலையில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை உயரவில்லை என்பது வீழ்ச்சி கிடையாது. வீடு என்பது பெரும்பாலான மக்களுக்கு இன்னும் எட்டாக் கனியாக தான் உள்ளது.

* பணமதிப்பிழப்பு மற்றும் தவறாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்த பேச்சு இல்லை. இந்த நிறுவனங்கள் செயல்படவில்லை என்றால் எப்படி நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இந்தியர்கள் வேலைக்காக நுழைந்து வந்தனர். இந்த மக்களுக்கு தற்போது வேலை எங்கே?

* நமது ஆரம்ப கல்வி முறை தொடர்ந்து குழப்ப நிலையிலேயே இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் எழுத, படிக்க தெரியாமலும், அடிப்படை கணக்கு தெரியாத நிலையிலும் உள்ளனர். மோடி பிரதமராக பொறுப்பேற்று 40 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையிலும், இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

* அரசு சாராத மொத்த உற்பத்தி 4.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு 90 சதவீதமாகும்.

* பொது தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் கட்டுமான துறையும் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சி 1.17 சதவீதம் மட்டுமே. கட்டுமான துறை 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இரு துறைகளும் இணைந்து 82 முதல் 85 சதவீதம் வரையிலான பங்களிப்பை அளிக்கிறது. முக்கிய 2 துறைகளுமே தற்போது தள்ளாட்டத்தில் இருந்தால் எப்படி வேலை வாய்ப்பு உருவாகும்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்க வேண்டும் என்றால் நேரமும், இடமும் போதாது. அனைத்து சமயங்களிலும் புத்திசாலித்தனமாக இருக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு பிரச்னைகளை கண்டறிந்து செயலாற்றும் வரை நாடு எதை நோக்கியும் செல்ல முடியாது. முதலில் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தாலே விடிவு பிறந்துவிடும். பொருளாதாரத்தில் தற்போது பிரச்னை உள்ளது. இதை உணர்ந்து அதை எதிர்கொள்ள அரசு பணியாற்ற வேண்டும்.